தமிழ், தமிழர்...
My Community
February 22, 2018, 05:34:25 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 ... 510 511 [512]   Go Down
  Print  
Author Topic: தமிழ், தமிழர்...  (Read 384768 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10220 on: October 09, 2017, 03:14:19 PM »

தோழியோ, தன் தோழி தலைவனுடன் சிறப்புற வாழ வேண்டினான்; தலைவியோ "பால் ஊறுக, பகடு சிறக்க; செல்வம் வளர்க; செழிப்பு தழைக்க!' என வேண்டினானாம். தலைவி மேலும்,

"நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
பகைவர் புல் ஆர்க பார்ப்பர் ஓதுக
பசி இல்லாகுக பிணி சேன் நீங்குக
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
அறம் நனி சிறக்க அல்லது கெடுக
அரசு முறை செய்க கனவு இல்லாகுக
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க'


என்கிறாள். நாடு பகை நீங்கி, மழை பொழிந்து வேளாண்மை செழித்து, வேதங்கள் ஓதப்பட்டு பசி, பிணி நீங்கி தன் தாய்நாடு முறையான ஆட்சியோடு வாழ வேண்டும் என்று தலைவி தன் மனத்தை தெள்ளிய நீரோடையாய் வைத்து வேண்டுகிறாள்.

ஐங்குறுநூறு அடையாளம் காட்டும் இத்தலைவி தன் கணவன் பிரிந்த நிலையிலும்கூட நாட்டு நன்மையையே சிந்தித்திருப்பது வியப்பான செய்தி!

ஐங்குறுநூற்றுத் தலைவியை வேட்கைப் பத்தில் பாடிச் சிறப்பித்தவர் புலவர் ஓரம் போகியார். இத்தலைவி ஆயிரத்தில் ஒருத்திதான்.


By -உ. இராசமாணிக்கம்
dinamani : 13th August 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10221 on: November 12, 2017, 12:54:34 PM »

ஆறுசெல் மாக்கள்

மனிதன் ஓரிடத்தில் இருந்து இடம்பெயர்ந்து கால்நடையாகச் சென்று வருவதைத்தான் "வழிப்போக்கர்கள்' எனும் சொல்லாடல் சங்க இலக்கியங்களில் பதிவிடப்பட்டிருக்கிறது.
மானிட வாழ்வில் ஏதாவது ஒரு சூழலில் வழிப்போக்கு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தன்மைதான் ஒன்றே தவிர, வடிவங்கள் காலத்திற்கேற்றாற்போல மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். தொல்காப்பியர் காலத்திலேயே வழிப்போக்குக் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது.

நிலம், நீர் என இரு நிலைகளிலும் வழிப்போக்கினைத் தமிழர்கள் உருவாக்கிக் கொண்டார்கள் என்பதற்குத் தொல்காப்பிய (அகத்.34) நூற்பாவே சான்றாக அமைகின்றது. சங்க இலக்கியங்களில் "செலவு' எனும் சொல்லாட்சி மேற்கண்ட நூற்பாவிற்கு வலு சேர்க்கிறது. வழிப்போக்கு எனும் சொல் குறித்த சிந்தனையானது தொல்காப்பியத்தை அடியொற்றியே பொருள் பேணப்படுகிறது. "விருந்தே தானும்' (செய்யு.237) எனும் நூற்பாவில் விருந்து எனும் சொல்லுக்குப் புதுமை, புதியவர்கள் எனப் பொருள் கொள்ளலாம். தன் பூர்வீகத்தை விட்டுக் கடந்தவர்களை புதியவர்கள் - வழிப்போக்கர்கள் என்று அழைக்கலாம்.

மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வழிப்போக்கர்களின் தாகம், பசி, ஓய்வெடுத்தல் முதலிய காரணங்களுக்காக ஊரின் ஒதுக்குப்புறமாக தரும சத்திரங்கள் நிறுவப்பட்டிருந்ததை, கல்வெட்டுச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. இது தற்காலத்தில் "சாவடி' எனும் சொல்லால் அழைக்கப்படுகிறது. பத்துப்பாட்டானது வழிபோக்கர்களை "பழுமரம் தேடிச் செல்லும் பறவைபோல' எனும் தொடரால் அடையாளப்படுத்துகிறது. அக்கால மக்கள் பொருளியல் காரணத்திற்காகவே வழிப்போக்கினை மேற்கொண்டனர் என்பதை சங்கப் பாடல்கள் சான்றிடுகின்றன.

சிலப்பதிகாரத்தில் கோவலனைப் பிரிந்த நாள்களில் வழிப்போக்கர்களுக்கு விருந்து எதிர்கோடலை கண்ணகி மேற்கொள்ளவில்லை (புறம்.120:17-19)என அறிகிறோம். பாரியின் பறம்பு நாட்டில் வழிப்போக்கர்களுக்கு முற்றிய கள்ளை உணவாக வழங்கினர்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10222 on: November 12, 2017, 12:55:23 PM »

"சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்'

(புறம்.173:7-9)

சாரை சாரையாகச் செல்லும் எறும்பின் வரிசையைப் போல வழிப்போக்கர்களுக்கு சிறுகுடிப் பண்ணன் உணவளித்து பசியாற்றியதைப் பாடல் சுட்டுகிறது. இவ்வாறு உணவளிப்பவரை புலவர் பசிப்பிணி மருத்துவன் எனப் போற்றுகிறார். சங்கப் பாடல்களில் வழிப்போக்கர்களுக்கு உணவளித்து பசியாற்றும் செய்திகள் புறம் 47, 70, 334, 370; அகம் 47, 54, 177; பொருநர் 64-67; பெரும்பாண் 20-22; மதுரைக்காஞ்சி 576-580; மலைபடு 54-64 ஆகிய நூல்களில் விரவிக் கிடக்கின்றன. மணிமேகலைக் காப்பியமானது மேலும் சிறப்பிக்கும் பொருட்டு (11:80, 81:28, 217) சில இடங்களில் பசிப்பிணி மருந்து எனக் குறிப்பிட்டுள்ளது.

வழிப்போக்கர்களுக்கு அக்காலத்தில் புதிய உணவு வகைகளை சமைத்துக் கொடுத்தனர் என்பதை புறநானூற்றுப் பாடல் (326:11-12) வெளிப்படுத்துகிறது. தலைவன் தன் தலைவியை விட்டு, பொருளுக்காக வழிப்போக்கினை மேற்கொண்டான். அவ்வாறு செல்லும் வழியில் என்ன கிடைக்கிறதோ அதனை உண்டு (நற்.24:5-6) பசியாறினான்.

தலைவன் அயல்நாட்டிற்குச் செல்லும் பாலை வழியில் கிடைக்கும் விளாம்பழங்களை உட்கொண்டான். அக்காலத்தில் இரவில் கதவைச் சாத்தும் முன்பாக யாராவது இருக்கிறார்களா எனக் கேட்பதும், பார்ப்பதும் மரபாக இருந்துள்ளது. அப்போது வழிப்போக்கர்கள் இருந்தால் உள்ளே அழைத்து, உணவு தந்து பசியாற்றும் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. வட மொழியில் இதனை அதிதி பூசை, அடைக்கலம் தருதல் எனும் சொற்களால் குறிப்பிடுவர்.


"எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட'

(நற்.41:6-7)
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10223 on: November 12, 2017, 12:56:09 PM »

இரவில் வந்த வழிப்போக்கர்களுக்கு நெய்யிட்டு சமைத்த உணவை வழங்கினர். ஊர்ப் பகுதி இல்லாத காட்டு வழியில் செல்லும்போது வழிப்போக்கர்களுக்குத் தகுந்த உணவு கிடைப்பது அரிதாகின்றது.

"ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்'

(நற்.43:4-5)

பசித்த செந்நாயானது மானைக் கொன்று தின்னது போக எஞ்சிய உணவானது வழிப்போக்கர்களுக்குப் பயன்பட்டது. அவர்கள் காட்டு வழியில் செல்லும்போது இயற்கையின் சீற்றம், கொடிய விலங்குகள், பூச்சிகள் எனப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். "ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடை'
(அகம்.21:4). வழிப்போக்கர்களின் பாதையானது வருத்தியதையும் அவர்களின் உணவுப் பொட்டலங்கள் காற்றில் தூக்கி எறியப்பட்டதையும் பாடல் வெளிப்படுத்துகிறது. மற்றொரு பாடலானது (அகம்.128:13-14) மழை பொழியும் பாலை நிலத்தின் வழியானது வழிப்போக்கர்களைத் துன்பப்படுத்தியதையும் எடுத்துரைக்கிறது.

வளர்ந்துவரும் நவீன உலகில் உறவுகள் அனைத்தும் சிதைவுபட்டு வரும் சூழலில், சங்க காலம், மருவிய காலம், காப்பிய காலம் என வரலாறு நெடுகிலும் வழிப்போக்கர்களைத் தம் உறவினரைவிட மேலாக, மதிப்புறு நிலையில் நடத்தியுள்ளதையும், மானிட வாழ்வின் முழுமைத் தன்மையினையும் எடுத்தியம்புகிறது.


By -முனைவர் த. பூவைசுப்பிரமணியன்
dinamani : 20th August 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10224 on: December 17, 2017, 01:24:34 PM »

சங்ககாலத் திரைப்படம்

பத்துப்பாட்டு நூல்களுள் ஆறாவது பாட்டாகத் திகழ்வது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். திணை - காஞ்சி. காஞ்சித் திணையாவது நிலையாமையைக் கூறுவது. மதுரையை ஆண்ட இப்பாண்டிய மன்னனுக்கு நிலையாமைப் பொருளுணர்த்த எழுந்த இலக்கியம் இது.

இது பெருந்திணைக்குப் புறனாக அமைகிறது என்பதைத் தொல்காப்பியம், (தொல்.1023) கூறுகிறது. மேலும், காஞ்சித் திணையின் விளக்கத்தையும் (தொல்.1024) கூறுகிறது.

வாழ்க்கையின் போர்க்கள நிலையாமைகளைக் கூறி, நிரந்தரமான புகழைப்பெற போரைவிட்டு அறச்செயல்களை மிகுதியாகச் செய்யுமாறு மாங்குடி மருதனார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார்.
அதுமட்டுமல்ல, கி.பி.3ஆம் நூற்றாண்டில் இருந்த மதுரை மாநகர், மதுரையில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை, காலை முதல் மூன்றாம் யாமம் வரை தொடர்ச்சியாக எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் ஒரு திரைப்படம்போல நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார் மாங்குடி மருதனார். பாண்டியன் நெடுஞ்செழியன் இவரை தம் அவைக்களப் புலவர்களுள் தலைமைப் புலவராய் வைத்திருந்தான். மேலும், இப்புலவரை ஒரு பாடலில் (இறுதி நான்கு அடிகளில்) பாராட்டிப் (புறம்.72) பாடியுள்ளான்.

""ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை''


பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழ்நாடு முழுவதையும் தனித்தாண்டவன்; ஈடு இணையற்ற வீரன்; போர் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தவன். நால்வகைப் படைகளையும் நல்ல முறையிலே பெருக்கி வைத்திருந்தான். பகை மன்னர்களை வென்று, அவர்கள் நாட்டிலிருந்து, தன் நாட்டிற்குக் கொண்டுவந்து குவித்த செல்வ வளங்களால், செல்வச் செருக்கால் உலகப் பொருள்களும், உலக இன்பமும் அழிந்துவிடக்கூடியவை என்பதை மறந்திருந்தான். இவனுடைய உற்ற நண்பராகவும், அவைக்களத் தலைமைப் புலவராகவும் இருந்த மாங்குடி மருதனார், உலகத்து நிலையாமையை அவனுக்கு உணர்த்த எண்ணினார்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10225 on: December 17, 2017, 01:26:11 PM »

அவனைப் பார்த்து முதலில், ""பொய்யறியாத அமைச்சர்களைக் கொண்ட பாண்டியர் பரம்பரையில் வந்தவனே என்கிறார். பிறகு அவன் முன்னோர்களின் அரசியல் நேர்மையை எடுத்துக் காட்டுகிறார். அதன்பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்துவரும் அரசியல் சிறப்பையும் பாராட்டுகிறார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றையும் போற்றுகிறார். இறுதியில் அவனுடைய சிறந்த குணங்களை எடுத்துக் கூறுகிறார். பின்னர், உன்னைப் போலவே இந்த உலகில் எண்ணற்ற மன்னர்கள் வீரர்களாக, செல்வர்களாக, கொடை மறவர்களாகச் சிறந்து வாழ்ந்தனர். அவர்கள்தம் எண்ணிக்கை கடலின் குறுமணலினும் பலராவர். புகழ்பட வாழ்ந்த அவர்கள் அனைவரும் இறுதியில் மாண்டு போயினர். ஆதலால், நீ போர் செய்து புகழ் ஈட்டுவதை விட்டுவிட்டு, நல்லறங்களைச் செய்து, நிலையில்லாத இந்த உலகத்தில் நிலைத்த புகழைப் பெறவேண்டும் என்றார்.

இந்நூலின் உட்கிடை: பாண்டியன் பரம்பரை, குலப்பெருமை, குடிப்பெருமை, வெற்றிச் சிறப்பு, நால்வகைப்படை, நிலந்தரு திருவிற் பாண்டியனின் சிறப்பு, பாண்டிய நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை அறிவுறுத்துதல்; ஐவகை நில வருணனை, அங்கு நடக்கும் செயல்கள், எழும் ஒலிகள். மதுரை நகரின் அமைப்பு; நால்வகைப்படை; பகலிரவுக் கடைகள்; திருவிழாக்கள்; மக்கள் பழக்க வழக்கங்கள்; பரத்தையர் வாழ்க்கை; மதுரையின் சிறப்பு. வையை ஆற்றின் சிறப்பு, அங்கு அமைந்திருக்கும் பாணர் இருக்கை. (வையை ஆற்றின் இரு கரைகளிலும் பூக்கள் நிறைந்த மரங்கள், அந்தப் பூந்தாதுக்கள் வையை ஆற்றில் விழுவதால் அவை வையை ஆற்றுக்கு மாலை போல் இருந்தது என்கிறார் புலவர். இன்று வையை ஆற்றில் நீரும் இல்லை, மணலும் இல்லை இரு கரைகளிலும் மரங்களும் இல்லை).

அரண்மனை, அகழி, மதில், வாயில், கடைத்தெருக்கள், 375 முதல், 430 வரை: நால்வகைப் படைகள், பல்வேறு பொருள்கள் விற்போர், மனைதோறும் மலர்விற்கும் மகளிர், பகல் கடைகளின்(நாலங்காடி) பேரொலி. செல்வர் செயல், செல்வப் பெண்டிர் செயல், அந்திக்கால பூஜை, பெளத்தப் பள்ளி, சமணப் பள்ளி, அந்தணர் பள்ளி, அறங்கூறு அவையம், வணிகர் தெரு, நாற்பெருங் குழுவினர், பல்வேறு தொழில் செய்வோர், வணிகர், அங்கு ஏற்படும் பேரொலி, உணவு வகைகள், அந்திக் கடைகளின் ஆரவாரம், மாலைக்காலம், குல மகளிர் செயல், ஓண நாளில் செய்யும் யானைப்போர், மகவு ஈன்ற மகளிர் குளத்தில் நீராடுதல், கடுஞ்சூல் மகளிர் கடவுளை வழிபடுதல், வெறியாட்டுக் குரவைக்கூத்து, இடைச்சாமம்,(இரண்டாம் யாமம் -நள்ளிரவு) பேய், அணங்கு, கள்வர், இக்கள்வரைக் கண்டுபிடிக்கும் ஒற்றர், ஊர்க்காவலர்). வைகறையில் வேதம் ஏதும் அந்தணர்கள், வைகறை நிகழ்ச்சிகள், மதுரை நகரின் வளமும் பெருமையும், வீரர்கள், மன்னனை வாழ்த்துதல், கொடைச் சிறப்பு, புலவர் மன்னனை வாழ்த்துதல், உலகப்பற்று விடுத்து (மெய்ப்பொருள் உணர்க) வீட்டு நெறியைக் காட்டுதல் முதலியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10226 on: December 17, 2017, 01:27:33 PM »

நிலந்தரு திருவிற் பாண்டியன் பழைமையும், தொன்மையும், தமிழின் பெருமையையும் நன்று உணர்ந்த தொல்லாசிரியர் பலருடன் கூடி மெய்யுணர்வைப் பெற்றவன். அதுபோன்று நீயும் பெறுக என்கிறார்.

இவ்வாறு 3ஆம் நூற்றாண்டிலேயே, ஓர் இசையமைப்பாளராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, கதாசிரியராக, ஒலிப்பதிவாளராக, புகைப்படக் கலைஞராக அன்றைய மதுரை மாநகரை ஒரு திரைப்படம் போல, திறம்பட காட்சிப்படுத்தி, இன்றைய இயக்குநர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறார் புலவர்.

ஒரு நாட்டுக்குக் கட்டாயம் (அவசியம்) இருக்க வேண்டிய நாடு, நகரம், மதில், அரண், அரசு, மக்கள், தொழில், கலை, பண்பாடு, நாகரிகம், சான்றோர் கூட்டம் ஆகிய அனைத்தையும் கூறியிருப்பதுதான் மதுரைக் காஞ்சியின் பெருஞ்சிறப்பு. மாங்குடி மருதனாரின் கவிக்கொடை, தமிழுக்குக் கிடைத்த அருட்கொடையாகும். இந்நூலைத் தேடிப் பதிப்பித்த உ.வே.சா.வின் புகழ் உலகம் உள்ளவரை நின்று நிலைக்கும்!


By -இடைமருதூர் கி. மஞ்சுளா
dinamani : 27th August 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10227 on: December 17, 2017, 01:37:08 PM »

தோகை மயில், சேவலாகுமா?

பெண்களின் நடைக்கு அன்னத்தையும், பேச்சுக்குக் கிளியையும், குரலுக்குக் குயிலையும் எனப் பறவைகளைப் பெண்ணியல்புகளுக்கு உவமைப்படுத்துவது வழக்கம். அவ்வாறு கூறும்போது, அவை ஆண்பறவை, பெண்பறவை எனப் பால் பிரித்துக் கூறப்பெறுவதில்லை. ஏனென்றால், அத்தன்மைகள் குறிப்பிட்ட அப்பறவை இனத்திற்குரிய பொதுவான குணங்கள். ஆனால், மயிலினத்தில் மட்டும் கலவம் விரித்தாடும் ஆண்மயிலே அழகாகத் தோற்றமளிக்கிறது. எனவே, ஆண்மயிலே பெரும்பாலும் மகளிர்தம் அழகுக்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.

மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல், நின்
வீபெய் கூந்தல் வீசுவளி உளர
(நற்.264:4,5)

விரைவளர் கூந்தல் வரைவளி உளர
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
(புறம்.133:4,5)

கொடிச்சி கூந்தல் போல் தோகை
யஞ்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்
(ஐங்.300:1,2)

என்றெல்லாம் பெண்களின் கூந்தலுக்கு மயில்தோகை உவமைப்படுத்தப்பெற்றுள்ளது. தோகையால் அழகு பெற்றதால் மயிலின் சாயலும், நடையும், கண்ணும், மென்மைத் தன்மையும்கூட மகளிருடன் ஒப்புமைப்படுத்தப் பெற்றுள்ளன. தன் அழகால் ஆண்மயில், இலக்கியங்களில் மட்டுமின்றி, மேலும் பல பெருமைகளைப் பெற்றிருப்பினும் அவற்றிற்கு விலையாக ஓர் இழப்பையும் பெற்றுள்ளது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10228 on: December 17, 2017, 01:40:02 PM »

தொல்காப்பியர், தமிழுலகம் காலம்காலமாகப் பின்பற்றிவரும் முறைமைகளை மரபியலில் வகுத்துத் தந்துள்ளார். அவற்றுள் விலங்கினங்களின் ஆண்பாற் பெயர்களைப் பட்டியலிடும் நூற்பா(2), பறவைகளுக்கான ஆணினத்திற்குச் சேவல் எனும் பெயரீடு வழக்கிலிருந்தமையைத் தெரிவிக்கிறது. ஆனால், ஆண்மயிலை மட்டும் சேவல் என அழைக்கும் மரபு இல்லை என்பதனை,

"சேவல் பெயர்க் கொடை சிறகொடு சிவணும்
மாயிருந்தூவி மயில் அலம் கடையே'
(தொல்.மரபு.48)

என்றும் தெரிவித்துள்ளது. இந்நூற்பாவில், சிறகு என்பது பறவை இனத்தைக் குறிப்பிடும் சினையாகுபெயர். அதாவது, பெரிய தோகையையுடைய மயிலைத்தவிர, பிற சிறகுடைய ஆண்பறவைகளுக்குச் சேவல் எனும் பெயர் பொருந்தும் என்பது நூற்பாவின் பொருள்.
திருமாலின் ஊர்தியான கருடப்பறவையே, அவர்தம் கொடியிலும் இடம்பெற்றுள்ளது. (சிவன், சக்தி, திருமால் முதலான புராணக் கடவுளருக்கு ஊர்தியும், கொடியும் ஒன்றே). அதனால் திருமாலைச் சேவலங் கொடியோன் என்றும்(1:11, 4:36,37), சேவ லூர்தியுஞ் செங்கண் மாஅல்(3:60) என்றும் குறிப்பிடும் பரிபாடல் அடிகள், கருடப் பறவையைச் சேவல் என்றே குறிப்பிட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் மேலும்,

"வண்ணப் புறவின் செங்காற் சேவல்' (நற்.71:8), "உள்ளுறைக் குரீஇ காரணற் சேவல்' (நற்.181:1), கூகைச் சேவல் (நற்.319:4), "கானக் கோழி கவர்குரல் சேவல்' (குற.242:1), "நீருறைக் கோழிநீலச் சேவல்' (ஐங்.51:1), "வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்' (அக.33:5), "கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்' (அக.346:3), அன்னச் சேவல் (புறம்.67:1) என ஆணினத்தைச் சார்ந்த பிற பறவைகள் சேவல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால், ஆண்மயிலைச் சேவல் என இலக்கியங்கள் எங்கும் குறிப்பிடவில்லை.
 தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பின் நான்கு இயல்களுக்கும் அமைந்த மிகச்சிறந்த உரையாகக் கருதப்படுவது பேராசிரியர் உரையாகும். இவ்வுரையில், இந்நூற்பாவுக்குரிய விளக்கப் பகுதியில், ஆண்மயிலானது சேவல் என அழைக்கப்பெறாமைக்குப் பேராசிரியர் கூறியுள்ள காரணம் பின்வருமாறு:
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10229 on: December 17, 2017, 01:43:11 PM »

""மாயிரும் தூவி மயில் என்றதனால் அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயல ஆகலின், ஆண்பால் தன்மை இல என்பது கொள்க'' அதாவது, ஆண்மயில் தன் தோகையால் பெற்ற ஆடலாலும் அழகு நடையாலும், பெண்தன்மைகளை ஒத்திருந்தமையால் , மற்ற ஆண்பறவைகள் பெற்ற சேவல் எனும் பெயரீட்டினைப் பெறவில்லை என்கிறார். மேற்குறிப்பிட்ட நூற்பாவை அடுத்து,

"ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம்
ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப'
(தொல்.மரபு.49)

என அமைந்துள்ள தொல்காப்பிய நூற்பா, பேராசிரியர் கருத்துக்கு அரண் செய்கிறது. ஆற்றல்மிக்க ஆண் விலங்கினங்கள் மட்டுமே ஏற்றை எனக் குறிப்பிடப்பெற்றது போன்று, வலிமையுடைய ஆணினப் பறவைகள் மட்டுமே சேவல் என அழைக்கப்பெற்றிருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்பெறும் கோழியின் ஆணினத்தை அகநானூறு, "மனையுறைக் கோழி மறனுடைச் சேவல்'(அக.277:15) எனக் குறிப்பிட்டுள்ளமை மேலும் பேராசிரியர் கருத்தை உறுதி செய்கிறது.

சண்டையிடும் போர்க்குணம் பெற்றுள்ளமையால் மனையுறை ஆண்கோழி, மறனுடைச் சேவல் எனப் புலவர் குறித்துள்ளார் போலும். இயற்கையிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்ட மனித இனம், பிற பறவையினங்களை தன் சுற்றுப்புறச் சூழல்களில் அதிகம் காணமுடியாமையாலும், கோழியானது வீட்டில் வளரக்கூடிய வளர்ப்புப் பறவை என்பதாலும் சேவல் எனும் அப்பெயர், மனைக்கோழியின் ஆணினத்திற்கு மட்டுமே நிலைத்துவிட்டது.
சேவல் எனும் பெயரீட்டைப் பற்றிக் கூறுவதால் மற்றொரு செய்தியையும் இங்கு குறிப்பது இன்றியமையாததாகிறது. அதாவது, குதிரையுள் ஆணினைச் சேவல் எனக்கூறும் வழக்கமும் இருந்துள்ளமையைத் தொல்காப்பியர் மரபியலில் தெரிவித்துள்ளார்(69). சிறகுகள் உடைய பறவைகளுக்கே உரிய சேவல் எனும் ஆண்பாற்பெயரை, குதிரைக்குக் கூறிய காரணம் என்னவாக இருக்க இயலும்? பறவைகள் வானத்தில் பறப்பது போன்று காற்றில் விரைந்து செல்லும் இயல்புடைய குதிரையைச் சேவல் என்றழைத்துள்ளனரோ என எண்ணத் தோன்றுகிறது. அதுவே காரணம் என்பதனைத் தொல்காப்பியப் பேராசிரியர் உரை உறுதிப்படுத்துகிறது. மேலும், தொல்காப்பியரே கற்பியலில்,

"வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம்போல் உற்றுழி உதவும்,
புள்ளியற் கலிமா உடைமையான'
(கற்.53)

எனக் குறிப்பிட்டுள்ளமை மேற்காணும் கருத்தை உறுதி செய்கிறது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10230 on: December 17, 2017, 01:45:00 PM »

ஆக, பறவை போல் விரைவாக ஓடும் தன்மை பெற்றுள்ளதால், விலங்கினமான ஆண்குதிரைக்குச் சேவல் எனப் பெயரளித்துள்ளனர். ஆனால், பறக்கும் பறவையினமான ஆண்மயிலோ, பெண்ணுக்குரிய அழகுத் தன்மையைப் பெற்றுள்ளதால் சேவல் எனப் பெயர்பெறாது போயிற்று. பழந்தமிழரின் ஒவ்வொரு பெயரீடும் உறுதியான காரணங்களும், பொருளும் கொண்டு வழங்கப்பெற்றவை என்பதை இப்பெயரீடுகள் உணர்த்துகின்றன.

இத்தகைய காரணங்களால், சேவல் எனும் பெயரீட்டைப் பெற இயலாது போன ஆண்மயில், பொதுப்பெயர்களான மஞ்ஞை, மயில் என்ற பெயர்களாலேயே குறிப்பிடப்பெறுகிறது. ஆண்பறவை என்பதை அடையாளப்படுத்த வேண்டிய இடங்களில், தோகை அடைமொழியாகப் பயன்படுத்தப்பெறுகிறது. ஆண்பறவை என்பதனை அடையாளம் காட்டும் மயிலின் தோகையே, ஆண்பறவையினத்திற்குரிய சேவலெனும் பெயரைப் பெறாமைக்கும் காரணமாயிற்று. மயிலுக்குப் பேகனிடம் போர்வைக் கொடையைப் பெற்றுத்தந்ததும் தோகைதான்; சேவல் எனும் பெயர்க்கொடையை இழக்கச் செய்ததும் தோகைதான்.


By -முனைவர் வாணி அறிவாளன்
dinamani : 03rd September 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10231 on: December 17, 2017, 02:01:26 PM »

தமிழ்க் காப்பியங்களில் புலம் பெயர்தல்

காலங்காலமாக தாங்கள் வாழ்ந்த ஒரு வாழ்விடப் பரப்பைவிட்டு, பிறிதோர் இடத்திற்குச் செல்வதைப் "புலம் பெயர்தல்' என்பர். இவ்வாறு இடம்விட்டு இடம் பெயருவதைத் தனி மனிதர் செய்யலாம்; கூட்டமாக இனக் குழுவினரும் இவ்வாறு இடம் பெயரலாம். இனக்குழு இடம்பெயர்தலை, "திரள் புலப்பெயர்வு' என்பர். இவ்வாறான திரள் புலப்பெயர்வு இயற்கைப் பேரிடர் காரணமாக எழும் குடியேற்றினால் நிகழலாம்; சில போழ்து, அடிமைத்தனம் காரணமாகவும் வலிந்து இந்தப் புலம்பெயர்தல் நடை பெறலாம்.

"புலம்' என்ற தமிழ்ச்சொல் பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். அறிவு, இடம், ஒலி முதலிய ஐம்புலன், திக்கு, நுண்மை, மேட்டுநிலம், காடு முதலிய பொருள்களைப் "புலம்' என்ற சொல் தருவதாக மதுரைத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, வேதம் முதலிய பொருளைத் தருவதாக ந.சி.கந்தையாவின் செந்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

நடைமுறையில் "புலம்' என்ற சொல் இடம், திசை முதலிய பொருள்களைத் தருவதாகச் சுட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. தென்புலம், வடபுலம் முதலிய சொற்கள் முறையே தென்திசை, வடதிசை ஆகிய சொற்களைத் தருகின்றன.

"வேறுபுல முன்னிய விரகறி பொருந' (பொரு.3) என்ற தொடர், வேற்றிடம் சென்ற பொருநரைச் சுட்டுகிறது. போர், பகை காரணமாக வேறிடங்களுக்குச் செல்வதைச் சுட்டும்போது, "வேறு புலத்து இறுக்கம் வரம்பில் தானை' எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.
கால் நகையால்(சிலம்பால்) வாய்நகை (புன்னகை) இழந்தவள் வாழ்வரசி கண்ணகி! சோறுடைய சோணாட்டின் வணிகப் பெருமக்களான கோவலனும் கண்ணகியும் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற அருகில் இருந்த பாண்டிய நாட்டிற்குப் புலம்பெயர்கின்றனர்.

"சேயிழை! கேள் இச்
சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனோடு
உலத்தபொருள் ஈட்டுதல் உற்றேன்! மலர்ந்தசீர்
மாடமதுரை யகத்துச் சென்று ...'
(9:73-76)

எனச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10232 on: December 17, 2017, 02:03:07 PM »

பாண்டியனால் கொல்லப்பட்ட கோவலனின் முற்பிறப்பு பற்றி, மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் எடுத்துரைக்கிறது. கபிலபுரத்திலிருந்து கலிங்க நாட்டின் சிங்கபுரத்திற்குத் தன் மனைவியான நீலியுடன் புலம்பெயர்ந்தான் சங்கமன் என்பவன்.

"அரும்பொருள் வேட்கையின் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வணிகன்'
(23:146-150)

என்ற பகுதி பொருள் தேடல் காரணமாகத் தன் நாட்டிலிருந்து பிறநாட்டிற்குப் புலம்பெயர்தலைக் காட்டுகிறது. கோவலன், சங்கமன் ஆகிய இந்த வணிகர்கள் தம் மனைவியரோடு குடும்பமாகப் புலம்பெயர்ந்தனர். இதனைத் தனிமனிதப் புலம்பெயர்தல் எனலாம்.

சிலம்புடன் கதைத் தொடர்புடைய மணிமேகலை காப்பியமும் இவ்விதமான புலம்பெயர்தலைக் குறிப்பிடுகிறது. புகார் நகரத்தில் வசிப்பவன் தருமதத்தன். அவனுடைய மாமன் மகள் விசாகை. அவ்விருவரும் களவுப் புணர்ச்சி (திருமணத்திற்கு முன்னதான சந்திப்பு) கொண்டனர் என ஊரார் அலர் தூற்றுகின்றனர். அலருக்கு அஞ்சிய விசாகை, சம்பாபதி கோயிலுக்குச் சென்று சம்பாபதி தெய்வத்தின் அருளால், தனது ஒழுக்கத்தை நிலைநாட்டி, ஊரவர் அலரை ஒழிக்கின்றாள்; கன்னிமாடம் சென்று துறவு பூணுகிறாள். தருமதத்தனோ, தன் பெற்றோருடன் புகாரைவிட்டு, பாண்டி நாட்டு மதுரைக்குப் புலம் பெயர்கின்றான். இதனை,

"தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெருநதர் தன்னைப் பிறகிட் டேகித்
தாழ்தரு துன்பம் தலை யெடுத்தாயென
நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப்பெருந் செல்வத்துத்
தக்கண மதுரை தான் சென்றடைந்தி'

(மணி 22:101-106)

என மணிமேகலை காட்டுகிறது.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10233 on: December 17, 2017, 02:03:58 PM »

பழிக்கு அஞ்சியும் புலம்பெயர்தல் நிகழ்வதனை இதன் வழி அறிய முடிகிறது. தருமதத்தன் தனது குடும்பத்துடன் இடம்பெயர்தல் என்பது தனிமனிதப் புலம்பெயர்வு எனலாம். மேலும், சோழநாட்டிலிருந்து மக்கள் அண்டை நாடான பாண்டிய நாட்டு மதுரைக்குப் புலம்பெயர்தல் தமிழர்தம் வழக்கமாக இருந்தமையை உணர முடிகிறது.

திருத்தொண்டர் புராணத்துள் இடம்பெறும் பெண் அடியார் புனிதவதியார். அவரது தெய்வத் தன்மையை உணர்ந்த அவளுடைய கணவர் பரமதத்தன், புனிதவதியாரைப் பிரியக் கருதுகிறான். கடல் வணிகம் மேற்கொள்கிறான். இதை, "கலஞ் சமைத்தற்கு வேண்டுங் கம்மியருடனே செல்லும் புலங்களில் விரும்பு பண்டம் ...' என்பார் சேக்கிழார். இவ்வாறு பொருளீட்டிய பரமதத்தன் மீளவும் தான் வாழ்ந்த காரைக்காலை அடையாமல், பாண்டிநாட்டின் கடற்கரைப் பட்டினத்தை அடைகிறான். இவ்வாறு வாழ்வியல் சிக்கல் காரணமாக சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்குப் புலம் பெயர்தல் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம் எனப் பல தமிழ்க் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளது எண்ணற்கு உரியதாகும்.


By -முனைவர் யாழ். சு. சந்திரா
dinamani : 03rd September 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10234 on: December 17, 2017, 02:08:08 PM »

பாவையின் அழகும் பன்னிரண்டு தலங்களும்

கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலர் என்ற புலவர் பெருமான் பாடிய தனிப்பாடல் இது. இனிய இலக்கிய நயமும், இரு பொருளும் கொண்டது.

ஓர் அழகிய சிற்றூரின் தலைவன் செந்தில்வேல். அவனுடைய அமைச்சராகவும், இனிய நண்பராகவும், ஏன் தந்தையாகவும் திகழ்பவர் கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலர்.
ஒரு சமயம் தமிழ்நாட்டிலுள்ள சில திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள இறைவனை வழிபட்டுத் திரும்பும்போது, ஊர்த் தலைவனுக்கேற்ற மணப்பெண்ணையும் அழைத்துக்
கொண்டு வந்தார்.

ஊர்த் தலைவன் செந்தில்வேல் அவரை அகமும் முகமும் மலர வரவேற்று, ""தந்தையே! எனக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து வருவதாகக் கூறி, திருத்தல யாத்திரை சென்றீர்களே? எந்தெந்த ஊர்களுக்குச் சென்றீர்கள்? தங்களுடன் வந்திருக்கும் அழகிய பொற் பதுமை போன்ற இந்தப் பெண் யார்?'' என்று அன்பு மேலிட வினவினான்.
புலவர் சொல்லத் தொடங்கினார்: ""செந்தில்வேலே, சொல்கிறேன், கேள்! அழகிய மயிலைப் போன்ற சாயலும், வானத்தின் மீது செல்லும் கரிய மேகத்தைப் போன்ற கூந்தலும், கரும்பு போன்ற உடலும், மொட்டவிழ்ந்த முல்லை மலர் போன்ற வாயில் தந்தம் போன்ற வெண்மையான பற்கள் சிந்தும் புன்னகையும், கொடிய விஷத்தன்மை காட்டக்கூடிய கூர்மையான விழிகளும் கொண்டவள் இந்தப் பெண். உன்னையே நினைத்து வாடும் இவள், உன்னை அணைத்து மகிழும் பாக்கியம் தன் வயத்தில் இல்லாததோ என எண்ணி வருந்தி நிற்கின்றாள். மணிகள் கொண்ட ஆடையும், கை வளையல்களும் கழன்று போகுமாறு விரகதாபம் கொண்டு துன்பத்தால் மெலிந்து, உயர்ந்த மலை போன்ற மார்பகங்கள் விம்மி, கச்சு அறுந்து போகுமாறு புளகாங்கிதம் கொண்டு உன்னை வந்தடைந்தாள். அறத்தின் வடிவானவனே! செந்தில்வேல் என்னும் பெயருடைய மன்னவனே! அத்தகைய இயல்புடைய இப் பெண்ணைத் தழுவி, உன் இல்லத்திற்கு அவளை அனுப்பி வைத்தால், அதனால் வரக்கூடிய பேரின்பம் எனும் பாக்கியம் உன்னைச் சார்ந்ததாகும்'' என்று தான் அழைத்துவந்த பெண்ணை தலைவனிடம் ஒப்படைக்கிறார். மேலும் அவர்,

""இந்தப் பெண்ணாகிய நல்லாளைப் புகழ்ந்து பாடியும், தான் பல திருத்தலங்களுக்குச் சென்று வந்ததையும் ஒரு பாடலாகப் பாடுகிறேன். நீ கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவன். இந்தப் பாடலைக்கேட்டு, நான் சென்று வந்த 12 திருத்தலங்களை நீயே கண்டுபிடித்துக் கொள்!'' என்று கூறி, பின்வரும் பாடலைப் பாடுகிறார்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #10235 on: December 17, 2017, 02:09:23 PM »

பாவலர் பாடிய பாடலை ஒரு முறைக்கு இருமுறை கேட்டு அவர் சென்று வந்த திருத்தலங்களையும் தெளிவுற அறிந்து கொண்டு, புலவரைப் பாராட்டி மகிழ்ந்தான் அந்த ஊர்த்தலைவன்.

""திருமயிலை வான்மியூர் முகிலை அன சாயல்
 திகழ் கோதைத் திரு வல்லிக் கேணி லைமை உற்ற
ஒரு முல்லை வாயில் நகை ஆலங்காட் டுவிழி
ஒற்றியூர் வதுஅவசமோ எனநொந்துஉன் மயலால்
வரு மணிமே கலைக் காஞ்சித் துகிள் வலைகள் நழுவ
 மலைத்து அண்ணா மலை முலையின் வார்கிழிய வந்தாள்;
தரும துரை யே, செந்தில் வேல ரசே, அன்னாள்
தனைப் புலியூருக் கனுப்பின் சார்பாக்கம் உனதே!''


இதில் திரு மயிலை, திருவான்மியூர், திருவல்லிக்கேணி, திருமுல்லைவாயில், திருவாலங்காடு, திருவொற்றியூர், காஞ்சி, திருஅண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், புலியூர், திருவெண்பாக்கம் ஆகிய பன்னிரண்டு திருத்தலங்களும் வரப்பெற்று, அதில் பெண்ணின் நல்லாளையும் வருணிக்கும் வேறு பொருள் தோன்றும் நயம் உய்த்துணர்க.


By -டி.எம். இரத்தினவேல்
dinamani : 03rd September 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 ... 510 511 [512]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!